காந்தி சிலை அவமதிப்பு: டிரம்ப் கண்டனம்

வாஷிங்டன்; ‘போராட்டங்களின்போது, மஹாத்மா காந்தியின் சிலையை அவமதித்தது, இழிவான செயல்’ என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.அமெரிக்காவின் மினியாபொலிசில், போலீஸ் அதிகாரி ஒருவர், தன் முழங்காலால் கழுத்தில் நெருக்கியதில், ஜார்ஜ் பிளாய்டு, 46, என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் உயிரிழந்தார்.
மே, 25ல் நடந்த இந்த சம்பவத்தைக் கண்டித்து, நாடு முழுதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.கறுப்பின மக்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல் எனக் கூறி, இந்தத் தாக்குதலைக் கண்டித்து, அமெரிக்காவில் மட்டுமல்லாமல், உலகெங்கும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் பல நகரங்களில், பல நாட்கள், வன்முறை சம்பவங்கள் நடந்தன.

இந்த வன்முறை சம்பவத்தின்போது, வாஷிங்டனில், இந்தியத் துாதரகம் அருகே நிறுவப்பட்டுள்ள, மஹாத்மா காந்தியின், எட்டு அடி, எட்டு அங்குல உயரமுள்ள வெண்கலச் சிலையை, சிலர் சேதப்படுத்தினர். சிலையின் மீது பெயின்ட் வீசியதுடன், கிறுக்கியும் வைத்திருந்தனர். இந்த சம்பவத்துக்கு, அமெரிக்காவில் உள்ள இந்தியத் துாதரகம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. காந்தி சிலை அவமதிப்புக்கு, பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென் ஜஸ்டர், இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டார். இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு, ‘மஹாத்மா காந்தி சிலையை அவமதித்தது, இழிவான செயல்’ என, அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்..

Spread the love

Leave a Reply