இனப் பாகுபாட்டை நிராகரிக்க வேண்டும்: ஐ.நா., பொதுச் செயலர்

நியூயார்க்; “இனப்பாகுபாடு என்பது வெறுப்புணர்ச்சி; அதை, நாம் அனைவரும் நிராகரிக்க வேண்டும்,” என, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.

அமெரிக்காவில், மின்னசோட்டா மாகாணத்தின் மினியாபொலிசில், ஜார்ஜ் பிளாய்டு என்ற ஆப்ரிக்க அமெரிக்கரை, போலீஸ்காரர் ஒருவர், சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினார். அப்போது, பிளாய்டை தரையில் தள்ளி, அவரின் கழுத்தில், தன் கால் முட்டியால் அழுத்தியுள்ளார். இதில் மூச்சுத் திணறி, பிளாய்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, அமெரிக்கா முழுதும், கறுப்பின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நியூயார்க்கில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, இந்நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ், ‘டுவிட்டரில்’ நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: அமெரிக்காவில், வன்முறைகள் அரங்கேறுவதைக் கண்டு என் மனம் உடைந்து விட்டது. போராட்டக்காரர்களின் குறைகளை கேட்பது அவசியம். ஆனால், போராட்டக்காரர்கள் அதை அமைதியான வழியில் எடுத்துரைக்க வேண்டும்.

போராட்டங்களை எதிர் கொள்ளும் அதிகாரிகள், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். அனைத்து சமூகத்திலும், பன்முகத்தன்மை என்பது செழிப்பாக இருக்க வேண்டும்; அது அச்சுறுத்தலாக மாறிவிடக் கூடாது. இனப்பாகுபாடு என்பது வெறுப்புணர்ச்சி; அதை, நாம் அனைவரும் நிராகரிக்க வேண்டும். அனைத்து துறைகளைச் சேர்ந்த தலைவர்களும், சமூக ஒற்றுமைக்கு பங்களிப்பு செய்ய வேண்டும். அது, ஒவ்வொரு குழுவினரையும் மதிப்புள்ளவர்களாக உணர வைக்கும்.

சமத்துவமின்மை, பாகுபாடுகளை களைவது அவசியம். மிகவும் பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கான ஆதரவை வலுப்படுத்தி, அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love

Leave a Reply