அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்-இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை

புதுடெல்லி,

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து உள்ளது. சீனாவில் உள்ள ஆய்வுக்கூடத்தில்தான் கொரோனா நோய்க்கிருமி உற்பத்தி செய்யப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதை சீனா திட்டவட்டமாக மறுத்தது. மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும் அமெரிக்கா கேட்டுக்கொண்டு உள்ளது.

இதற்கிடையே, லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த மாதம் முதல் வாரத்தில் கைகலப்பும், மோதலும் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார். ஆனால் அதை ஏற்க இந்தியா நாசூக்காக மறுத்துவிட்டது. இதேபோல் சீனாவும் டிரம்பின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

அமெரிக்காவுடன் இந்தியா நல்லுறவுடன் இருப்பதும், தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் அமெரிக்கா இருப்பதும் சீனாவுக்கு பிடிக்கவில்லை.

இந்த நிலையில், அமெரிக்கா-சீனா மோதல் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இது தொடர்பான அந்த நாட்டின் முன்னணி பத்திரிகையான ‘குளோபல் டைம்ஸ்‘ பத்திரிகையில் எழுதப்பட்டு இருப்பதாவது:-

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளில் மோதல் போக்கு இருந்து வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து இருக்கிறது. உலகின் இரு பெரிய பொருளாதார நாடுகளுக்கும் இடையே புதிதாக பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக சிலர் கணித்து உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், அமெரிக்கா-சீனா மோதல் விவகாரத்தில் தலையிடாமல் இந்தியா மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த விஷயமாக இருந்தாலும் அமெரிக்கா-சீனா இடையேயான மோதலில் இந்தியா தலையிடுவதால் அந்த நாட்டுக்கு கிடைக்கும் ஆதாயத்தை விட இழப்பே அதிகம். இதை புரிந்து கொண்டு மோடி அரசாங்கம் செயல்படவேண்டும்.

அமெரிக்கா-சீனா இடையேயான பனிப்போரில் இந்தியாவும் பங்கேற்ற வேண்டும் என்றும், இதன்மூலம் ஆதாயம் பெறலாம் என்றும் இந்தியாவில் ஒரு தரப்பினர் கருதுகிறார்கள். அதற்காக அவர்கள் குரல் எழுப்புகிறார்கள். அதுபோன்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத குரல்கள் இந்திய அரசை தவறாக வழிநடத்துமே தவிர ஒட்டுமொத்த தேசத்தின் எண்ணத்துக்கு உகந்ததாக இருக்காது.

சீனாவுடனான எந்த பிரச்சினையை கையாளுவதாக இருந்தாலும், அதில் அமெரிக்காவின் தாக்கம் இல்லாமல் இந்தியா பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் பிரச்சினைகள் மேலும் சிக்கல் ஆகிவிடும்.

இதற்கு சமீபத்திய உதாரணமாக எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை கூறலாம். இந்த பதற்றத்தை இரு நாடுகளும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். அதற்கான திறமை இரு நாடுகளுக்கும் உண்டு. மூன்றாவது நாட்டின் தலையீடு தேவை இல்லை.

அமெரிக்கா-சீனா பனிப்போரில் இந்தியா அமெரிக்காவின் பக்கம் சாய்ந்தாலோ, அல்லது அந்த நாட்டுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சீனாவுக்கு எதிராக செயல்பட்டாலோ இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளின் பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும். தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், எல்லை பிரச்சினையில் இந்தியாவின் கவுரவத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் கூறி இருந்தது பற்றி பீஜிங் நகரில் சீன வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியானிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், இந்திய-சீன எல்லையில் நிலைமை அமைதியாகவும், கட்டுக்குள் இருப்பதாகவும், தடையற்ற பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகள் மூலம் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

இரு நாட்டு தலைவர்கள் இடையே (பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது கருத்தொற்றுமை ஏற்பட்ட விஷயங்களை நிறைவேற்றுவது, நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பது ஆகியவற்றில் உறுதியாக இருப்பதாகவும் அப்போது அவர் கூறினார்.

Spread the love

Leave a Reply