வெட்டுக்கிளிகள் வர வாய்ப்பு குறைவு

சென்னை : ”தமிழகத்திற்கு, பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பு வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே, விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டங்களில், சிறப்பு குழு அமைக்கப்படும்,” என, வேளாண் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.

வெட்டுக்கிளி தாக்குதலை தடுப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம், தலைமை செயலகத்தில், நேற்று நடந்தது. முதல்வர் இ.பி.எஸ்., தலைமை வகித்தார். துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டம் முடிந்த பின், வேளாண் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி கூறியதாவது:ஊட்டி, காந்தள் பகுதி; கிருஷ்ணகிரி மாவட்டம், நெர்லகிரி கிராமம்; கன்னியாகுமரி மாவட்டம், கண்ணனுார் ஆகியவற்றில் காணப்பட்ட வெட்டுக்கிளிகள், பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல. அவை உள்ளூர் வகையை சேர்ந்தவை.

ஆப்பிரிக்க நாடுகளில் உருவாகும், பாலைவன வெட்டுக்கிளிகள், நடப்பாண்டு ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பாலைவனப் பகுதிகளைக் கடந்து, ராஜஸ்தான் மாநிலத்திற்குள் புகுந்துள்ளன.அங்கிருந்து கிழக்கு பக்கமாக, பீஹார், ஒடிசா வரை பரவ வாய்ப்புள்ளது. தென் மாநிலங்களுக்கு பரவ வாய்ப்பு மிகவும் குறைவு என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை.தமிழகத்திற்கு, பாலைவன வெட்டுக்கிளிகள் வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றபோதும், கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, முதல்வர் பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

அதன்படி, பாலைவன வெட்டுக்கிளிகள் நகர்வு குறித்து, மத்திய அரசு வழியாகவும், அண்டை மாநிலங்களில் உள்ள, வேளாண் துறை வழியாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்படும். மாவட்டங்களில், வெட்டுக்கிளி தாக்குதலை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க, மாவட்ட கலெக்டர் தலைமையில், குழு அமைக்கப்படும்.இக்குழுவில், வேளாண் இணை இயக்குனர், வேளாண் பல்கலை விஞ்ஞானிகள், வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட வன அலுவலர், தீயணைப்பு அலுவலர், தோட்டக்கலைத்துறை இயக்குனர் போன்றோர் இடம் பெற்றிருப்பர்.

எதிர்பாராதவிதமாக வெட்டுக்கிளிகள் ஊடுருவினால், அவற்றை எதிர்கொள்ள, பரிந்துரைக்கப் பட்ட உயிரி பூச்சிக்கொல்லிகள், ரசாயனமருந்துகள், அவற்றை தெளிப்பதற்கான உபகரணங்களை, போதுமான அளவு, இருப்பு வைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார். வெட்டுக்கிளி தாக்குதல் ஏற்பட்டால்…l வயல்களில், டிரம் அல்லது டின்களால், ஒலி எழுப்ப வேண்டும். வயல்களில் பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டமாக தென்பட்டால், முதல் சுற்றில், ‘அசாடிராக்டின்’ என்ற, சுற்றுச்சூழலை பாதுகாக்கும், வேம்பு சார்ந்த தாவர பூச்சிக் கொல்லியை, பயன்படுத்த வேண்டும்l வெட்டுக்கிளிகள் பெரும் கூட்டமாக தென்பட்டால், வேளாண் அதிகாரிகள் ஆலோசனை பெற்று, மாலத்தியான், குளோர்பைரிபாஸ், லாம்டாசைஹேலாத்ரின் போன்றவற்றில், ஏதேனும் ஒரு மருந்தை, தெளிப்பான்கள் மற்றும் பெரிய டிராக்டர் பயன்படுத்தி தெளிக்க வேண்டும்.

தமிழகத்தில், 250 வகையான உள்ளூர் வெட்டுக்கிளிகள் உள்ளன. இவற்றின் நன்மை செய்யக்கூடிய வெட்டுக்கிளிகளும் உள்ளன. எனவே, உள்ளூர் வெட்டுக்கிளிகளைக் கண்டு, பாலைவன வெட்டுக்கிளிகள் என, விவசாயிகள் அச்சப்பட வேண்டாம்l வெட்டுக்கிளிகள் கூட்டமாக தென்பட்டால், விவசாயிகள் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.வெட்டுக்கிளிகள் புகைப்படம் எடுத்து, உழவன் செயலியில், பூச்சி நோய் கண்காணிப்பு பிரிவில், பதிவேற்றம் செய்து, ஆலோசனை பெறலாம்.

Spread the love

Leave a Reply