மூன்று மாதங்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள்

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜூன் 1-ம் தேதி முதல் சுழற்சி முறையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக கிழக்கு கடற்கரை பகுதியில் 61 நாள் மீன்பிடித் தடைக்காலத்தை 47 நாட்களாக மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் இன்று முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் மொத்தமுள்ள 240 விசைப்படகுகளில் 120 விசைப்படகுகள் இன்று கடலுக்கு சென்றன.

இவ்வாறு இன்று செல்லும் விசைப்படகுகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களும், மீதமுள்ள 120 விசைப்படகுகள் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்களும் என சுழற்சி முறையில் செல்ல வேண்டும் என மீனவளத்துறை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று 120 விசைப்படகுகள் இன்று கடலுக்கு சென்றன.
முன்னதாக மீன்பிடித் துறைமுகத்துக்குள் மீன்வளத்துறை அனுமதி பெற்ற மீனவர்கள், வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு வந்த மீனவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இதுகுறித்து ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு செல்லும் மீனவர் சேவியர் கூறுகையில், தூத்துக்குடியில் 3 மாதங்களுக்குப் பிறகு ஆண்கள் மீன்பிடிப்பு தொழிலுக்கு அனுமதி வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கடலில் மீன்கள் கிடைப்பதை பொறுத்து எங்களுக்கு வருமானம் இருக்கும். ஆகவே இன்று கடலுக்குச் செல்லும் படகுகள் திரும்பி வருகையில் தான் எங்கள் வருமானம் தீர்மானிக்கப்படும்.

தமிழக அரசு மீனவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுத்ததோடு தனது பணியை நிறுத்திக் கொண்டது. மீனவர்களை பற்றி கவலைப்படவில்லை. எங்களுக்கு அவர்கள் எவ்வித உதவியும் அதன்பிறகு செய்யவில்லை. இன்று கடலுக்கு செல்லும் மீனவர்கள் தகுந்த பாதுகாப்புடன் செல்வதற்கு ஆயத்தமாகி உள்ளனர்.

மீன்பிடி துறைமுகத்திற்கு வரும் மீனவர்கள், வியாபாரிகளுக்கு உடல் வெப்பநிலை கண்காணிக்கப்படுகிறது. டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது. ஒரு படகுக்கு 21 பேர் சென்று வந்த நிலையில் தற்போது 12 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நாங்கள் தொழிலுக்கு செல்கிறோம் என்றார்

Spread the love

Leave a Reply