முதல்வர் பேசியது என்ன; விவரங்கள்

அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனான, ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் இ.பி.எஸ்., பேசியதை பார்க்கும் போது, கொரோனா கள நிலவரத்தை, அதிகாரிகள் அவருக்கு தெரியப்படுத்துகின்றனரா என்ற, சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், கொரோனா நோய் பரவல் அதிகரித்தபடி உள்ளது. சென்னையில், தினமும், 500க்கும் மேற்பட்டோர், நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

ஆரம்பத்தில், ஒருவருக்கு நோய் தொற்று உறுதி யானால், அவர் வசித்த தெரு முழுதும், நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.தற்போது, நோய் பரவல் அதிகம் இருப்பதால், நோய் பாதிப்புக்குள்ளானவர் வீட்டில் வசிப்போர் மட்டுமே வெளியில் செல்ல, தடை விதிக்கப்படுகிறது. அந்த தெருவில் உள்ளவர்கள், எவ்வித தடையுமின்றி, வெளியில் சென்று வருகின்றனர்.மேலும், நோய் பாதிக்கப்பட்டவர் வீட்டில், நோய் அறிகுறிகளுடன் உள்ளவர்களுக்கு மட்டுமே, மருத்துவ பரிசோதனை நடத்துகின்றனர். மற்றவர்களுக்கு சோதனை எதுவும் நடத்தப்படுவதில்லை.

இவ்விபரம், முதல்வருக்கு தெரியுமா என்று தெரியவில்லை.நேற்று முன்தினம், அனைத்து கலெக்டர்களுடன், முதல்வர் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில், அவர் பேசியதாவது:கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதும், அவருடன் நேரடியாகவும், மறைமுகமாகவும், தொடர்பில் இருந்தோரை கண்டறிந்து, பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தினமும், இரண்டு முறை, துாய்மை பணி மேற்கொள்ளவேண்டும். அங்கு வசிக்கின்ற மக்களுக்கு, கபசுர குடிநீர் வழங்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட பகுதி களிலிருந்து, எவரும் வெளியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த இடத்திற்கு, வேறு எவரும் செல்லாமல், பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.இதில் எதுவுமே, சென்னையில் நடைமுறையில் இல்லை. நோய் அறிகுறி இருந்தாலும், மருத்துவ பரிசோதனை செய்ய மறுக்கின்றனர்.

நடவடிக்கை :
தனியார் மருத்துவமனையில், எந்த நோய்க்கு சிகிச்சைக்கு சென்றாலும், முதலில் கொரோனா பரிசோதனை செய்யுமாறு கூறுகின்றனர். அதற்கு கட்டணம், 4,500 ரூபாய் என்கின்றனர். தற்போது, சென்னையில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதற்கு காரணம், நோய்க்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறாதது தான் என, மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். நோய் பரவல் உள்ள பகுதிகளில், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள முன்வருவோருக்கும், அரசு மருத்துவமனைகளில், பரிசோதனை செய்ய மறுக்கின்றனர்.

இதனால், அவர்கள் நோய் முற்றிய பின், மருத்துவமனைக்கு வரும் நிலை ஏற்படுகிறது. எனவே, முதல்வர் கள நிலவரத்தை அறிந்து, பழைய முறைப்படி, நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள, அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தி, பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Spread the love

Leave a Reply