முதல்வரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை
சென்னை: முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தொற்றுக்கு, இதுவரை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, தனியார் மருத்துவமனையில், சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு வழங்க வேண்டிய தொகுப்பு கட்டணங்கள் குறித்து சுகாதார செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு, தனியார் மருத்துவமனைகளுக்கு, தமிழக அரசால் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்தும் ஒரு சில நிபந்தனைகளுடன் கூடிய அறிக்கையை அளித்துள்ளது.இதனை பரிசீலனை செய்த தமிழக அரசு, கீழ்கண்ட கட்டணங்களை நிர்ணயித்து ஒப்புதல் வழங்கியுள்ளது.
நிபந்தனைகள்
1.அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் உள்ள மொத்த படுக்கை எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 சதவீதம் முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகளுக்கு பிரத்யேகமாக ஒதுக்க வேண்டும்
2. முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட பயனாளிகள் மருத்துவமனைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவையில்லை.
3. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்த கோரும் மருத்துவமனைகளின் மீது முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
4. மேலும் விவரங்கள் மற்றும் புகாருக்கு 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்
மருத்துவ பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படும். இந்த புதிய அறிவிப்பு தமிழகத்தில், முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் ஏற்கனவே பதிவு செய்து பயன் பெற தகுதியான குடும்பங்களுக்கு பொருந்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.