மதுரை விமான நிலையத்துக்குள் தோட்டாக்களுடன் புகுந்த பெண்ணால் பரபரப்பு

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 12.30 சென்னை விமானம் செல்ல இருந்தது. அதில் பயணிக்க வந்தவர்களை விமான நிலைய ஊழியர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது பெண் பயணி ஒருவரின் உடைமைகளில் துப்பாக்கி தோட்டாவுக்கான 6 காலி குப்பிகளும், 3 தோட்டாக்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அந்த பெண் பயணியை பிடித்து விமான நிலைய ஊழியர்கள் விசாரணை நடத்தினர். அதில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த புகாடியா லட்சுமி லாவண்யா(வயது 41) என்பதும், இவர் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

போலீசார் விசாரணை

பின்னர் அவர் பெருங்குடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் விசாரணை நடத்தியபோது, அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் அதிகாரி வக்கீலாக உள்ளதாகவும், அவரிடம் முறையாக அனுமதி பெற்ற துப்பாக்கிகள் உள்ளது. அந்த துப்பாக்கி தோட்டாக்கள் மீது எனக்கு ஆசை. எனது சந்தோசத்திற்காக கடந்த 4 ஆண்டுகளாக அதனை நான் வைத்திருக்கிறேன்.

எப்போதும் எனது பையில் தான் அவைகள் இருக்கும். மேலும் எனக்கு விமான நிலையத்திற்கு துப்பாக்கி தோட்டாக்களை கொண்டு செல்லக்கூடாது என்று தெரியாது. ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்னை வழியாகத்தான் செல்ல முடியும். விமானம் மூலம் தான் சென்னை செல்ல வேண்டும் என்பதால் மதுரை விமான நிலையத்திற்கு வந்தேன் என்று போலீசாரிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில் போலீசார் அந்த பெண் வேலை பார்க்கும் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் உரிமம் பெற்ற 3 துப்பாக்கிகள் வைத்திருக்கிறேன். அந்த துப்பாக்கிக்கான தோட்டாக்களாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.

கைது

பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகாடியா லட்சுமி லாவண்யாவை கைது செய்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Spread the love

Leave a Reply