மணலூரில் சுடுமண் உலை கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடி ஊராட்சியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் அகழாய்வு பணி நடந்து வருகிறது.6-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை கீழடியில் மட்டும் நடைபெற்ற அகழாய்வு பணிகள் 6-ம் கட்டமாக கீழடி, கொந்தகை, அகரம் ,மணலூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கீழடியில் நீதி அம்மாள் என்பவரது நிலத்தில் சில குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன. இதில் சிறிய பானை, பெரிய பானை, செங்கல் கட்டுமான பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு கொந்தகையில் சில குழிகள் தோண்டப்பட்டு ஆராய்ச்சி பணிகள் செய்ததில் முதுமக்கள் தாழி மற்றும் சிறிய வகை பானைகள், மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அகரத்தில் மண் பானை ஓடுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முதன் முதலாக மணலூரில் கடந்த 23-ந் தேதி முதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. நேற்று மணலூரில் சுடுமண் உலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொல்லியல் துறையினரின் ஆர்வத்தை அதிகரித்து உள்ளது. இதுகுறித்து மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் கூறும்போது, இந்த உலையானது அணிகலன்களை வடிவமைப்பதிலும், உலோகம் தயாரிக்கவும் பயன்பட்டுள்ளதா என இனி வரும் நாட்களில் முழுமையாக தெரியவரும் என கூறியுள்ளார்.

Spread the love

Leave a Reply