போலி பேஸ்புக் கணக்குகள்; பெண்களின் ஆபாச மார்பிங் படங்கள் – பின்னணியில் இவர்களா?

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட சூழலில் இணைய வழிக் குற்றங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கல்லூரி மாணவர்களின் சிந்தனை எந்தளவிற்கு தவறாக செயல்பட்டுள்ளது இங்கே காணலாம். ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக 94899 19722 என்ற தனி தொடர்பு எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளார். இதன்மூலம் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் மேற்கூறிய எண்ணில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தனது மனைவியின் போலியான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் சிலர் ஆபாசமாக சித்திரித்து வெளியிட்டுள்ளனர் என்று புகார் தெரிவித்தார்.

மேலும் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும், பணம் தரவில்லை எனில் அதனைப் பரப்பிவிடுவதாக மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து எஸ்.பி வருண்குமாரின் உத்தரவின்படி மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் பரமக்குடி உலகநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான ரோகித்(19) என்பவர் சிக்கினார். இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கணிப்பொறியியல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பேஸ்புக்கில் 4 போலியான கணக்குகளைப் பயன்படுத்தி அதில் 2 கணக்குகள் மூலம் பெண்களின் புகைப்படங்களை எடுத்து அதனை ஆபாசமாக மார்பிங் செய்து வந்தது தெரியவந்தது.

அந்தப் படங்களை அப்பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பி அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் செயலில் ரோகித் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரது செல்போனை ஆய்வு செய்த போது அதில் பல ஆபாச வீடியோக்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக ரோகித் மீது வழக்குப்பதிவு செய்த பரமக்குடி நகர காவல்நிலைய போலீசார் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

Spread the love

Leave a Reply