நீலகிரியில் புதிய துணை மின் நிலையம்

சென்னை : நீலகிரியில் அமைக்கப்பட்டு வரும், குந்தா நீரேற்று மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை எடுத்து செல்ல, அங்குள்ள பரளி என்ற இடத்தில், 400 கிலோ வோல்ட் திறனில், நவீன துணை மின் நிலையமும், மின் வழித்தடமும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா மலை பகுதிகளில், மின் வாரியத்திற்கு, 834 மெகா வாட் திறனில், 12 நீர் மின் நிலையங்கள் உள்ளன. அங்குள்ள அணைகளில், மழை காலங்களில், தண்ணீர் தேக்கப்பட்டு, மின் உற்பத்தி செய்யப்படுகிறது.குந்தாவில் உள்ள, அவலாஞ்சி, எமரால்டு அணைகளுக்கு அருகில், தலா, 125 மெகா வாட் திறனில், நான்கு அலகுகள் உடைய, குந்தா நீரேற்று மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய மின் நிலையத்தில் மட்டும், ஒரு முறை பயன்படுத்திய தண்ணீரை, மீண்டும் அதிக திறன் உடைய, மோட்டார், ‘பம்ப்’ வாயிலாக, அணைகளுக்கு எடுத்து சென்று, தேவைக்கு ஏற்ப, மின் உற்பத்தி செய்யலாம்.அங்கு, 2022 — 23ல், மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. குந்தா நீரேற்று மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, பல பகுதிகளுக்கு எடுத்து செல்ல, குந்தா மலை பகுதியில், பரளி என்ற இடத்தில், மின் வாரியம், 400 கிலோ வோல்ட் திறனில், நவீன துணை மின் நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளது.

அந்த துணை மின் நிலையத்தை, குந்தா நீரேற்று மின் நிலையத்துடன் இணைக்க, 29 கி.மீ., துாரத்திற்கு, 230 கி.வோ., திறனிலும்; பரளி துணை மின் நிலையத்தில் இருந்து, கோவை மாவட்டம், காரமடை, துணை மின் நிலையத்துடன் இணைக்க, 32 கி.மீ., துாரத்திற்கு, 400 கி.வோ., திறனிலும், நவீன மின் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இவற்றுக்கான திட்ட செலவு, 430 கோடி ரூபாய்.இதன் வாயிலாக, குந்தா புதிய மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம், பரளி, காரமடை துணை மின் நிலையங்கள் வாயிலாக,நீலகிரி, கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பல மாவட்டங்களுக்கு, அதிகளவில் எடுத்து செல்லப்பட்டு, சீராக வினியோகம் செய்யப்படும்.

Spread the love

Leave a Reply