கோவைக்கு பச்சை கொடி: துவங்கியது பயணிகள் ரயில் சேவை

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில், விமானம், பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தொற்று பரவுவதை தடுக்க தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செல்ல வட மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
தற்போது ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களில் இன்று முதல் பல்வேறு கடுப்பாடுகளுடன் பொது போக்குவரத்து சேவை துவங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து இரண்டு மாதங்களுக்கு பின் கோவையில் இருந்து காட்பாடிக்கு செல்லும் இண்டர்சிட்டி சூப்பர் பாஸ்ட் எக்ஸிபிரஸ் காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்றது. அதே போல் கோவையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ஜனசதாப்தி காலை 7.10 மணிக்கு புறப்பட்டது.
ஆன்லைனில் முன்பதிவு செய்த பயணிகள் நீண்ட நாட்களுக்கு பின் தங்கள் சொந்த ஊர்களுக்கு ரயில் மூலம் புறப்பட்டுச்சென்றனர். இது குறித்து பயணிகள் கூறும் போது ”உறவினர்கள் வீட்டிற்கு வந்த கொரோனா ஊரடங்கால் கோவையில் சிக்கி 2 மாதத்திற்குப் பின் சொந்த ஊர்களுக்கு செல்வதாகவும், விரைவாக பரிசோதனை செய்து பயணிகளை அனுப்புவதாக தெரிவித்தனர். மேலும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றியவாறு பயணத்தை தொடரும் படி ரயில்வே அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர், பாதுகாப்பு கருதி அதை பின் பற்றுவோம் எனவும் தெரிவித்தனர்.

Spread the love

Leave a Reply