கீழடி அருகே மனித மண்டை ஓடு கண்டெடுப்பு

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக அகழாய்வு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதில் பழங்கால செங்கல் சுவர் கட்டிடங்கள், சிறிய, பெரிய பானைகள் எடுக்கப்பட்டு உள்ளன. கொந்தகையில் ஏற்கனவே 3 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு செய்ததில் 12 முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. இதில் ஒரே குழியில் 8 முதுமக்கள் தாழிகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏராளமான மண்பானைகள், குடுவைகள், மூடிகளும் கிடைத்தன. மனித வலது, இடது கைகளின் எலும்புகளும் கிடைத்தன. மணலூரில் சுடுமண் உலையும், கீழடியில் விலங்கின எலும்புக்கூடும் கிடைத்தன.

மண்டை ஓடு

கொந்தகையில் நேற்று கதிரேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் தென்னங்கன்று நட எந்திரம் மூலம் குழிகள் தோண்டப்பட்டன. அப்போது முதுமக்கள் தாழி போல் தென்பட்டது. அதை ஆழமாக தோண்டி பார்த்த போது உள்ளே மனித மண்டை ஓடு, எலும்புகள் எடுக்கப்பட்டன. இதை கேள்விப்பட்ட மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் மற்றும் அலுவலர்கள் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

அகரம் பகுதியில் மண்பாண்ட பாத்திரங்கள், பானை ஓடுகள், நத்தை கூடுகள் கிடைத்துள்ளன. நத்தைகளில் கடல்நீர் நத்தை, நன்னீர் நத்தை என இருவகை உண்டு. நன்னீர் நத்தைகள் உணவாகவும், மருந்தாகவும் பண்டைய காலத்தில் தமிழர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அகரத்தில் சேரிக்கப்பட்ட நத்தை கூடுகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரியல் பிரிவின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Spread the love

Leave a Reply