மீண்டும் வருகிறார் ஆன்டி முர்ரே

லண்டன்: காயத்தில் இருந்து மீண்ட பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே, மீண்டும் டென்னிஸ் போட்டியில் களமிறங்க உள்ளார்.

பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே 33. ஒலிம்பிக் போட்டியில் 2 தங்கம் (2012, 2016) வென்ற இவர், மூன்று கிராண்ட்ஸ்லாம் (2013, 2016ல் விம்பிள்டன், 2012ல் யு.எஸ்., ஓபன்) பட்டத்தை கைப்பற்றி உள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்ட இவர், கடைசியாக நவம்பர் மாதம் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான டேவிஸ் கோப்பையில் பங்கேற்றார். இந்நிலையில் மீண்டும் இவரது இடுப்பு பகுதியில் லேசான காயம் ஏற்பட இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விலகினார்.

தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆன்டி முர்ரே, லண்டனில் வரும் ஜூன் 23–28ல் தனது சகோதரர் ஜெமி முர்ரே நடத்தும் ‘கொரோனா’ தடுப்பு நிவாரண நிதிக்கான போட்டியில் பங்கேற்க உள்ளார். ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் நடத்தப்படும் இப்போட்டியில் பிரிட்டனின் கைல் எட்மண்ட், டான் இவான்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து ஆன்டி முர்ரே கூறுகையில், ‘‘கொரோனா காரணமாக அனைவருக்கும் சவாலான நேரமாக உள்ளது. இப்போட்டியின் மூலம், மீண்டும் டென்னிஸ் விளையாடுவதற்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்களின் சேவைக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்,’’ என்றார்.

Spread the love

Leave a Reply