போர்ப்ஸ் பட்டியலில் கோஹ்லி * ரூ. 195 கோடி வருமானம்

புதுடில்லி: அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு நட்சத்திரங்களுக்கான போர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்தியர் ஆனார் கோஹ்லி. முதன் முறையாக டென்னிஸ் வீரர் ஒருவர் ‘நம்பர்–1’ இடம் பிடித்தார்.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பத்திரிகை ‘போர்ப்ஸ்’. ஒவ்வொரு ஆண்டும் அதிகம் சம்பாதித்த ‘டாப்–100’ விளையாட்டு நட்சத்திரங்கள் பட்டியல் இதன் சார்பில் வெளியாகும். வீரர், வீராங்கனைகள் பெறும் சம்பளம், போட்டிகளில் வென்ற பரிசுத் தொகை, விளம்பர ஒப்பந்தங்களில் கிடைக்கும் வருமானங்கள் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இதன் படி இந்த ஆண்டு (2019–2020) வெளியான பட்டியலில் இந்தியா சார்பில் கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி மட்டும் ‘டாப்–100’ பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவர் சம்பளம், பரிசுத் தொகையாக ரூ. 15 கோடி, விளம்பர ஒப்பந்தங்களில் ரூ. 180 கோடி என மொத்தம் ரூ. 195 கோடி சம்பாதித்துள்ளார். கோஹ்லிக்கு 66 வது இடம் கிடைத்தது.

பெடரர் ‘நம்பர்–1’

பட்டியலில் முதல் இடத்தை முதன் முறையாக டென்னிஸ் வீரர் தட்டிச் சென்றார். ரூ. 789 கோடி சம்பாதித்த சுவிட்சர்லாந்தின் பெடரர் ‘நம்பர்–1’ இடம் பிடித்தார். அடுத்த மூன்று இடங்களை கால்பந்து வீரர்கள் தட்டிச் சென்றனர். போர்ச்சுகலின் ரொனால்டோ (ரூ. 789 கோடி), அர்ஜென்டினாவின் மெஸ்சி (ரூ. 781 கோடி), பிரேசிலின் நெய்மர் (ரூ. 717 கோடி) 2, 3 மற்றும் 4வது இடங்களைப் பெற்றனர்.

டென்னிஸ் வீரர்கள் செர்பியாவின் ஜோகோவிச் (ரூ. 335 கோடி) 23வது, ஸ்பெயினின் நடால் (ரூ. 300 கோடி) 27வது இடம் பிடித்தனர். டென்னிஸ் வீராங்கனைகளில் முதன் முறையாக ஜப்பானின் ஒசாகா (ரூ. 282 கோடி), அமெரிக்காவின் செரினா வில்லியம்சை (ரூ. 271 கோடி, 33வது இடம்) பின்தள்ளி 29வது இடம் (ரூ. 282 கோடி) பிடித்துள்ளார்.

 

கொரோனாவால் குறைவு

‘டாப்–100’ பட்டியலில் இடம் பெற்ற விளையாட்டு நட்சத்திரங்கள் இணைந்து இந்த ஆண்டு மொத்தம் ரூ. 27,039 கோடி சம்பாதித்துள்ளனர். இது கடந்த ஆண்டினை விட 9% குறைவு. கொரோனா காரணமாக போட்டிகள் பாதிக்கப்பட்டதால் இப்படி குறைந்துள்ளது.

Spread the love

Leave a Reply