விளம்பரம் இல்லாமல் நாங்கள் உதவி செய்து வருகிறோம் -அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

விருதுநகர்: கொரோனா விவகாரத்தில் திமுக விளம்பரம் தேடிக்கொள்வதாகவும், தங்களை பொறுத்தவரை வெளியே தெரியாத வகையில் விளம்பரமின்றி உதவிகள் புரிந்து வருவதாகவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து வந்த அவர், திடீரென திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

இதனிடையே விருதுநகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் எடப்பாடியார் தமிழகத்தில் சிறந்த நிர்வாகத்தை வழங்கி வருவதாக புகழாரம் சூட்டினார்.

திமுக அரசியல்
பட்டியலின மக்களை விமர்சிக்கும் வகையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி பேசியது கண்டனத்திற்குரியது என்றும், அதிமுக ஆட்சியில் அனைவரும் சமம் என்ற நிலையில் தான் மக்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் பாகுபாட்டை உருவாக்கி திமுக அரசியல் செய்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்தார்.

பொய் தகவல்
திமுக எம்.பி.க்கள் தலைமைச் செயலாளரிடம் அளித்த அனைத்து மனுக்களும் ஆராயப்பட்டுவிட்டது என்றும், அதில் அரிசி, பருப்பு கொடுக்குமாறு தான் மனுக்கள் உள்ளதே தவிர, கடன் கொடுக்குமாறோ, மானியம் கொடுக்குமாறோ எதுவும் இல்லை எனக் கூறினார். திமுகவினர் நல்லவர்களாக இருந்திருந்தால் மக்கள் கேட்ட அந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கிகொடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து அதனை அரசிடம் கொடுத்துவிட்டு சிறு குறு தொழில், விவசாயிகள் தொடர்புடையவை என பொய்யுரைப்பதாக கூறினார்.

சிறந்த நிர்வாகம்
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் 300 பேர் உயிரிழந்துவிட்டதாக இல்லாத ஒன்றை கூறி அரசியல் செய்வதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சாடினார். அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறிய அவர், சிறந்த நிர்வாகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருவதாக தெரிவித்தார்.

மாவட்டச் செயலாளர் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுகவை முழு அட்டாக் செய்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, பேட்டியின் போது பலமுறை எடப்பாடியார் அரசு என்ற வார்த்தையை குறிப்பிட்டு பேசியது கவனிக்கத்தக்கது. இதனிடையே தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவியை மீண்டும் பெறுவதற்காக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தீவிரமாக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

Spread the love

Leave a Reply