விஜயபாஸ்கரை மாற்ற வேண்டும்: ஸ்டாலின்

சென்னை: சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேசை மாற்றியது போல், பல குற்றச்சாட்டுக்கு ஆளான சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அ.தி.மு.க., அரசின் அதிகார விளையாட்டுக்கு அப்பாவிகள் பலிகடா ஆக்கப்படுகின்றனர். கொரோனா தொடர்பான ஒவ்வொரு அறிவிப்பிலும் முரண்பாடுகள் ஏன்? வைரஸ் தொற்று வேகமாக பரவி, பொது மக்களின் மனதில் நாளுக்க நாள் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. நாளுக்கு நாள் சுழன்றடிக்கும் சூறாவளியாக கொரோனா அதிவேகமாக பரவி வருவது பெரும் கவலையளிக்கிறது.
கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தி இறப்பினை கட்டுப்படுத்த வேண்டும். எத்தனை நோயாளிகள், எவ்வளவு பரிசோதனைகள், எவ்வளவு மரணங்கள் என்பதை மறைக்காமல் வெளியிட வேண்டும். பேரிடர் தடுப்பு பணியில் அடிப்படை ஒருங்கிணைப்பு இல்லாததே குளறுபடி, குழப்பத்திற்கு காரணம்.
சுகாதாரத்துறை செயலாளரை மாற்றியது போல், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்றியிருக்க வேண்டும். பல குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பதால், அவரை மாற்ற வேண்டும் என நடுநிலையாளர்கள் கோரிக்கை விடுக்கினறனர். சுகாதார துறையை முதல்வர் தன் வசம் எடுத்து கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் அலட்சியப்படுத்தக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Spread the love

Leave a Reply