தமிழகத்தில் மின் கட்டணக் கொள்ளை: ஸ்டாலின் கண்டனம்

சென்னை: மங்காத்தா சூதாட்டம் போல், தமிழகத்தில் மின்கட்டண வசூலில் கெடுபிடி காட்டப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், மின் கணக்கீடு எடுக்கமுடியவில்லை என்ற காரணத்தால், முந்தைய மாதங்களில் செலுத்திய கட்டணத்தை மார்ச், ஏப்., மாதங்களில் செலுத்தலாம் என அதிமுக அரசு அறிவித்தது. இதை நம்பிய பொதுமக்களுக்கு தற்போது மிகப்பெரிய ‘ஷாக்’ ஏற்படுத்திய பகல் கொள்ளை என மின் நுகர்வோர் கொந்தளிக்கிறார்கள்.

மின் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ள நிலையில், யூனிட்டை கழிக்காமல், வெவ்வேறு ‘டேரிப்’பின் அடிப்படையில், புதிய மின் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு சிரமம்படுகின்றனர். 4 மாத மின் நுகர்வை, 2 மாத மின் நுகர்வாக பிரிக்காமல் கட்டணம் வசூலிப்பது தான் பிரச்னைக்கு காரணம் என தெரிந்தும் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு கெடுபிடி செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாது. மக்களிடம் நடத்தப்படும் மங்காத்தா சூதாட்டம் இது.
முந்தைய மாதம் மின் நுகர்வோர் செலுத்திய கட்டணம், மொத்த யூனிட்டை, 2 மாத நுகர்வாக பிரிப்பது, ‘டேரிப்’ மாற்றத்தால் ஏற்படும் அதிக கட்டணம் உள்ளிட்டவற்றில், வேண்டுமென்றே உருவாக்கி இருக்கும் குழப்பங்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், உரிய முறையில் யூனிட்டுகளை கழித்து, மின் கட்டணம் வசூல் செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

ஜவுளி பொறியியல் பொருள்கள், தானியங்கி, மின் பொருள்கள், தோல் பொருள்கள், ஆயத்த ஆடைகள், பிளாஸ்டிக் உள்ளிட்டவை தயாரிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடிக் கிடந்தன. தொழிலே இல்லாத போது அவர்கள் எப்படி மின்கட்டணம் செலுத்தவார்கள். நிவாரணம் வழங்கி, மனநிம்மதி அளித்து, மீண்டும் தொழிலை துவங்க வைக்கலாம் என்ற அடிப்படை பொருளாதார ஊக்குவிப்பு குறித்து, அதிமுக அரசுக்கு அக்கறை இருப்பாதாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Spread the love

Leave a Reply