கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி:கடிதத்தில் பிரதமர் நெகிழ்ச்சி

புதுடில்லி : ”நம் மக்கள் தொகையால், இங்கு கொரோனா தாக்கியபோது, இந்தியா ஒரு பிரச்னையாக மாறும் என, பலரும் அஞ்சினர். ஆனால் இன்று, உலகம் நம்மை வியந்து பார்க்கிறது. உலகின் சக்தி வாய்ந்த மற்றும் வளமான நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியர்களின் கூட்டு வலிமையும், ஆற்றலும் இணையற்றது என்பதை, நாம் நிரூபித்துள்ளோம்.

கொரோனாவுக்கு எதிரான போரில், வெற்றிப் பாதையில், இந்தியா பயணிக்கத் துவங்கியுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராக, இரண்டாவது முறையாக பதவியேற்று, நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி, நாட்டு மக்களுக்கு, அனைத்து மொழிகளிலும், பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

என் சக இந்தியர்களுக்கு வணக்கம். கடந்த ஆண்டு, இதே நாளில், இந்திய ஜனநாயக வரலாற்றில், ஒரு பொன்னான அத்தியாயம் துவங்கியது, பல ஆண்டுகளுக்குப் பின், முழு பெரும்பான்மையுடன், முந்தைய ஆட்சியில் இருந்த அதே கட்சிக்கு, மக்கள் ஓட்டு போட்டனர்.

இந்த நேரத்தில், 130 கோடி மக்களுக்கும், நம் நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளுக்கும், மீண்டும் தலை வணங்குகிறேன்.சாதாரண நாளாக இருந்திருந்தால், நான் உங்கள் அருகில் தான் இருந்திருப்பேன். ஆனால் தற்போதைய சூழ்நிலைகள், அதை அனுமதிக்கவில்லை. அதனால் தான், இந்தக் கடிதம் வழியாக, உங்கள் ஆசீர்வாதங்களை கேட்கிறேன்.
உங்கள் பாசம், நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பு தான், எனக்கு புதிய ஆற்றலையும், உத்வேகத்தையும் அளித்துள்ளன. ஜனநாயகத்தின் வலிமையை நீங்கள் வெளிப்படுத்திய விதம், முழு உலகுக்கும் வழிகாட்டும் வெளிச்சமாக அமைந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், அரசு நிர்வாகம், ஊழலில் இருந்து, தன்னை தனியே பிரித்துக் கொண்டது; நேர்மையான நிர்வாகமாக மாறியுள்ளது. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சில முக்கிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அயோத்தி, ராமர் கோவில் வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒருமித்த தீர்ப்பு, இணக்கமான சூழ்நிலையை கொண்டு வந்தது.’முத்தலாக்’ முறை தடை செய்யப்பட்டது. கடந்த ஓராண்டில், 9.50 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில், 72 ஆயிரம் கோடி ரூபாய், நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. ‘ஜல்ஜீவன்’ திட்டம் மூலம், கிராமப்புறங்களில் உள்ள, 15 கோடி வீடுகளுக்கு, குழாய் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதில், அரசு வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த போது தான், கொரோனா, நாட்டை சூழ்ந்தது. நம் மக்கள் தொகையால், இங்கு கொரோனா தாக்கியபோது, இந்தியா உலகுக்கு ஒரு பிரச்னையாக மாறும் என, பலரும்
அஞ்சினர். ஆனால் இன்று, உலகம் நம்மை வியந்து பார்க்கிறது. உலகின் சக்தி வாய்ந்த மற்றும் வளமான நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியர்களின் கூட்டு வலிமையும், ஆற்றலும் இணையற்றது என்பதை, நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்

இன்னும் நாம் செய்ய வேண்டியது, அதிகம் உள்ளன. இரவு, பகலாக நான் வேலை செய்கிறேன். என் செயல்பாட்டில் குறைபாடு இருக்கக்கூடும். ஆனால், நம் நாட்டிலும், மக்களிடமும், எந்த குறைபாடும் இல்லை. என் பலம், ஆதரவு நீங்கள் தான்.சர்வதேச அளவில், இது நெருக்கடியான காலகட்டம் தான். ஆனால், இந்தியாவிற்கு இது ஒரு உறுதியான தீர்வுக்கான நேரமாகும். 130 கோடி மக்களும், ஒருபோதும் தவறான பாதையில் வழி நடத்தப்பட மாட்டார்கள். நாம், முன்னேற்றத்தின் பாதையில் செல்வோம்; வெற்றி நம்முடையது தான்.இவ்வாறு, மோடி கடிதத்தில் கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘டுவிட்டரில்’ பதிவிட்டுள்ளதாவது:மோடியின், இரண்டாவது ஆட்சியின் முதல் ஆண்டு, வரலாற்று சாதனைகள் நிறைந்ததாக அமைந்துள்ளது. மோடியின் தொலைநோக்கு மற்றும் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியா தொடர்ந்து முன்னேறி செல்லும். கடந்த ஆறு ஆண்டுகளில், மோடி, பல வரலாற்றுத் தவறுகளை சரிசெய்தது மட்டுமல்லாமல், தற்சார்பு கொண்ட இந்தியாவை உருவாக்க, கடந்த, 60 ஆண்டுகளாக இருந்த வெற்றிடத்தையும் நிரப்பியுள்ளார்.நேர்மையான தலைமை மற்றும் அயராத கடின உழைப்பின் பிரதிபலிப்புகள், நாட்டு மக்கள், தலைமையின் மீது வைத்துள்ள நம்பிக்கை ஆகியவை, உலகில் அரிதாகவே காணப்படுகிறது. இவ்வாறு, அமித் ஷா கூறியுள்ளார்.

Spread the love

Leave a Reply