உடனுக்குடன் கடன் வழங்குங்கள்: வங்கிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்

சென்னை : ‘விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுவினர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, உடனுக்குடன் கடன் வழங்க வேண்டும்’ என, வங்கி அதிகாரிகளுக்கு, முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்தார்.

மாநில அளவிலான வங்கி அதிகாரிகள் கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர் இ.பி.எஸ்., ஆண்டு கடன் திட்ட புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:உலகமே கொரோனா பேரிடரை சந்தித்து வருகிறது. தமிழகத்தில், சிறந்த மருத்துவ சிகிச்சை காரணமாக, குணமடைந்து, வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகமாகவும், இறப்பு மிக குறைவாகவும் உள்ளது.தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடப்பாண்டுக்கான கடன் திட்டத்தில், வேளாண்மை துறைக்கு, 1.48 லட்சம் கோடி ரூபாய்; சிறு, குறு தொழில்களுக்கு, 92 ஆயிரத்து, 75 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.
விவசாயத்திற்கான கடனுதவியை, வங்கிகள் உடனுக்குடன் வழங்க வேண்டும். தமிழகத்தில், இதுவரை, 20.20 லட்சம் உழவர் கடன் அட்டைகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதன் வழியாக, ஒருவருக்கு, 1.60 லட்சம் ரூபாய் கடன், வங்கிகளால் வழங்கப்படுகிறது.

எனவே, அனைத்து பகுதிகளிலும், சிறப்பு முகாம்கள் நடத்தி, அனைத்து விவசாயிகளுக்கும், உழவர் கடன் அட்டைகளை வழங்க வேண்டும்.மத்திய நிதி அமைச்சர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து உள்ளார். தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்கு, 30 சதவீதம்.மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள, 3 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் நிதியுதவி, அதிக அளவில், நம் மாநிலத்திற்கு கிடைக்க, அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 5,500 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரிக்குள், இலக்கை எட்ட வேண்டும்.ஊரக பகுதிகளில், சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவி குழுக்களை, குறு நிறுவனங்களாக உருவாக்க, வங்கிகளில், 20 லட்சம் ரூபாய் வரை, பிணையம் இல்லா கடன் வழங்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், சிறந்த மகளிர் சுய உதவி குழுக்களை தேர்வு செய்து, கடன் உதவி வழங்க வேண்டும்.நுாறு நாள் வேலை திட்டத்தில், 35 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் கூலியை வங்கிக்கு சென்று வாங்கும் சூழ்நிலை உள்ளது. கொரோனா குறையும் வரை, தொழில் செய்யும் இடத்திற்கு, வங்கி அதிகாரிகள் சென்று, நேரடியாக கூலித் தொகையை வழங்கினால் நல்லது.இவ்வாறு, முதல்வர் பேசினார்.கூட்டத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்ச்ர்கள் எம்.சி. சம்பத், துரைக்கண்ணு, பெஞ்சமின் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Spread the love

Leave a Reply