அரசுக்கு எதிராக போராட்டம் ; ராமதாஸ் திடீர் அறிவிப்பு

சென்னை : ‘கடலுாரில், சாயக்கழிவுகளை சுத்திகரிக்கும் ஆலை அமைக்கும் பணியை, தமிழக அரசு கைவிடாவிட்டால், போராட்டம் நடத்தப்படும்’ என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின், ஓர் அங்கமான கடலுார் மாவட்டத்தில், சிதம்பரம் அருகே சாயக்கழிவு ஆலை அமைக்கும் கட்டுமான பணிகள் முழு வீச்சில் துவங்கிஉள்ளன. அம்மாவட்டத்தின் வளமான பகுதிகளை, பாலைவனமாக்க கூடிய இந்த திட்டத்தை, உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் மீறி, மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த துடிப்பது கண்டிக்கத்தக்கது.கடலுார், ‘சிப்காட்’ பகுதியில் உள்ள ரசாயன ஆலைகளால், அப்பகுதி நச்சு பூமியாக மாறி வரும் நிலையில், அவற்றுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பது தான், மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதை செய்வதற்கு பதிலாக, இன்னொரு ரசாயன ஆலையை அனுமதிப்பதுடன், அதற்கு மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டு நிதியுதவி வழங்குவது, எந்த வகையிலும் நியாயமல்ல.எனவே, இந்த விஷயத்தில், தமிழக அரசு தலையிட்டு, சாயக்கழிவு ஆலைக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மக்களின் எதிர்ப்புகளை மீறி நடத்தப்படும் கட்டுமான பணிகளை, உடனே நிறுத்த வேண்டும். கட்டுமான பணிகளை நிறுத்தாவிட்டால், மக்களை திரட்டி, நானே தலைமையேற்று, மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Spread the love

Leave a Reply