சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணத்திற்கு ஒப்புதல்: பிரகாஷ் ஜவடேகர்

புதுடில்லி: சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கு நிவாரண சலுகைகள் வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், பிரதமர் இல்லத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், கொரோனா தடுப்பு நடவடிக்கை, நிவாரண நடவடிக்கைகள், பொருளாதார மீட்பு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே அறிவித்த சலுகைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் 14 விவசாய பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு. பல்வேறு பயிர்களுக்கான கொள்முதல் விலை 50 சதவீதம் முதல் 83 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை வங்கிக்கடன் வழங்கவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கான கடனுதவியில் 7 சதவீதம் வரை வட்டி தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம் 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயனடைவர்.

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கு நிவாரண சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 2 லட்சம் சிறு, குறு தொழில் முனைவோர் பயனடைவர். 250 கோடி ரூபாய் வரை வியாபாரம் உள்ள நிறுவனங்களுக்கும், 50 கோடி ரூபாய் வரை முதலீடு உள்ள நிறுவனங்களுக்கும், சிறு தொழில்களுக்கான சலுகைகள் அளிக்கப்படும். சிறு, குறு தொழில் துறையில் மத்திய அரசு வழங்கும் சலுகைகள் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Spread the love

Leave a Reply