இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது

புதுடெல்லி,

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் இந்தியா வரவிருந்தார். ஆனால், உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவரால் இந்தியாவுக்கு வர முடியாமல் போனது.

இதையடுத்து, இந்திய – ஆஸ்திரேலியா இடையேயான உச்சி மாநாடு முதன்முறையாக மெய்நிகர் மாநாடாக நடைபெற்றது.

இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய பிரதமர் மோடி ஒட்டு மொத்த உலகமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடி காலத்தை ஒரு வாய்ப்பாக மாற்ற இந்தியா முடிவெடுத்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சிமாநாட்டில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கொரோனா பாதிப்பு நிலைமை சீரடைந்தவுடன் குடும்பத்துடன் ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா வர வேண்டும்
என அழைப்பு விடுத்தார்.

அதனை தொடர்ந்து பொது சீர்திருத்தங்கள், பாதுகாப்பு, முக்கியமான தொழில்நுட்பம் தொடர்பான இரு நாடுகளிடையே 7 ஒப்பந்தகள் கையெழுத்தாகின. குறிப்பாக ராணுவ தளவாடங்களை கையாளும் போது இருநாட்டு ராணுவ தளங்களை பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்ள உதவும் என பார்க்கப்படுகிறது.

அத்துடன், இரு நாட்டு உறவுகளை ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மைக்கு உயர்த்துவது, வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு உரையாடலை அமைச்சரவை மட்டத்திற்கு மேம்படுத்துவது, இந்தோ-பசுபிக் கடற்சார் ஒத்துழைப்பை விரிவாக பகிர்ந்து கொள்வது குறித்தும் மெய்நிகர் உச்சிமாநாட்டின் போது முடிவெடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்தியா-ஆஸ்திரேலியா உச்சிமாநாட்டில் என் அன்பான நண்பரான ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்தித்தேன். எங்கள் நட்பின் முழு விரிவாக்கத்தையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த விவாதம் இருந்தது. இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டாட்சியின் புதிய மாதிரி, வணிகத்தை நடத்துவதற்கான புதிய மாதிரி என பதிவிட்டுள்ளார்.

Spread the love

Leave a Reply