இந்தியாவில் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்வு

உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் இந்த ஆட்கொல்லி வைரசின் பிடியில் இந்தியாவும் சிக்கியுள்ளது. இதனால் நாட்டில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

அதன்படி நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்துக்குள் இந்தியாவில் 11,502 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும், 325 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 424 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 9520 ஆகவும் உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,69,798 பேர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீடு திரும்பிவிட்ட நிலையில், 1,53,106 பேர் மட்டுமே ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பாதிப்பு

இந்த கொரோனாவில் கோரப்பிடியில் சிக்கி தவித்து வரும் மராட்டிய மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் 3,390 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,07,958 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,843 ஆகும். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்து இருக்கிறது.

தேசிய தலைநகரான டெல்லியில் புதிதாக 2224 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதனால் அங்கு பாதிப்பு 41,182 ஆக உயர்ந்து உள்ளது. 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 23,544 பேரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ஆயிரத்துக்கும் குறைவு

இதற்கு அடுத்த இடங்களில் உள்ள உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்காளம் மற்றும் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரம் முதல் 14 ஆயிரத்துக்குள் உள்ளது. அரியானா, கர்நாடகா, பீகார், ஆந்திரா மற்றும் ஜம்மு காஷ்மீரில் இந்த எண்ணிக்கை 5 ஆயிரம் முதல் 7,300-க்கு கீழே இருக்கிறது. தெலுங்கானாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், அசாமில் 4 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஒடிசா, பஞ்சாப், கேரளா, உத்தரகாண்ட், ஜார்கண்ட், சத்தீஸ்கார் மற்றும் திரிபுராவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரம் முதல் 4 ஆயிரத்துக்குள் இருக்கிறது. மற்ற மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது.

3,950 பேர் பலி

இந்த வைரஸ் பிடியில் சிக்கி நாடு முழுவதும் உயிரிழந்த 9,520 பேரில், 3,950 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வருமாறு:-

குஜராத் (1,477), டெல்லி (1,327), தமிழ்நாடு (479), மேற்குவங்காளம் (475), மத்தியபிரதேசம் (459), உத்தரபிரதேசம் (399), ராஜஸ்தான் (292), தெலுங்கானா (185), அரியானா (88), கர்நாடகா (86), ஆந்திரா (84), பஞ்சாப் (67), ஜம்மு காஷ்மீர் (59), பீகார் (39), உத்தரகாண்ட் (24), கேரளா (19), ஒடிசா (11), ஜார்கண்ட் (8), அசாம் (8), சத்தீஸ்கார் (8), இமாசலபிரதேசம் (7), சண்டிகார் (5), புதுச்சேரி (5). லடாக், மேகாலயா மற்றும் திரிபுராவில் தலா ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Spread the love

Leave a Reply