மேலூர் அருகேகிணற்றில் கிடந்த 4 அடி நீள முதலை

மேலூர் அருகே கிணற்றில் கிடந்த 4 அடி நீள முதலை மீன் வலையில் சிக்கியது.
முதலை
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வண்ணாம்பாறைபட்டியில் முருகன் என்பவரது விவசாய கிணற்றில் 4 அடி நீளமுள்ள முதலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அந்த கிணற்றில் தண்ணீர் குறைந்ததை தொடர்ந்து, அங்குள்ள மீன்களை பிடிக்க வலை போட்டுள்ளனர். அந்த வலையில், மீன்களுடன் சேர்த்து சுமார் 4 அடி நீளமுள்ள முதலை ஒன்றும் சிக்கியது.

இதனையடுத்து அந்த முதலையை லாவகமாக பிடித்த விவசாயிகள் அதனை ஒரு டிராக்டரில் பத்திரமாக வைத்தனர்.
சென்னைக்கு அனுப்பி வைப்பு
பின்னர் இதுகுறித்து கீழவளவு போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள், கிணற்றில் பிடிபட்ட முதலையை மீட்டு, சென்னையில் உள்ள வண்டலூர் வன உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு வண்ணாம்பாறைபட்டியிலுள்ள ஊருணி ஒன்றில் முதலை இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அந்த தகவலை உறுதிசெய்யும் வகையில் விவசாய கிணற்றிலிருந்து முதலை மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அந்த கிணற்றுக்கு முதலை வந்தது எப்படி? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
Spread the love

Leave a Reply