மீண்டும் பரபரப்பான ரயில் நிலையங்கள்
புதுடில்லி: நீண்ட இடைவெளிக்குப் பின், நாடு முழுதும், 200 பயணியர் ரயில்கள், நேற்று இயக்கப்பட்டன. அதனால், பல ரயில் நிலையங்களில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ரயில் பயணச் சீட்டு வாங்க, மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.ஊரடங்கு உத்தரவால், நாடு முழுதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. வெளிமாநிலத் தொழிலாளர்கள், சொந்த மாநிலம் திரும்புவதற்காக, சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. ஊரடங்கு உத்தரவுகள் நாடு முழுதும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ‘ஜூன், 1 முதல், 200 சிறப்பு பயணியர் ரயில்கள் இயக்கப்படும்’ என, ரயில்வே அறிவித்து இருந்தது.
இதற்கிடையே, வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் ஆந்திர பிரதேச அரசுகள், ரயில் சேவையில் சில மாறுதல்களை செய்யும்படி கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால், ஏற்கனவே திட்டமிட்டபடி, 200 ரயில்கள் நேற்று இயக்கப்பட்டன.பல ரயில் நிலையங்களில், பயணம் மேற்கொள்வதற்காக, பயணியர் அதிக அளவில் கூடியிருந்தனர். பயணச் சீட்டு வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால், அந்த ரயில் நிலையங்களில் மீண்டும் பழைய பரபரப்பு துவங்கியுள்ளன. பெரும்பாலான ரயில் நிலையங்களில், மக்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றினர்; முக கவசங்களும் அணிந்திருந்தனர்.
ரயில் புறப்படுவற்கு, 90 நிமிடங்களுக்கு முன், நிலையத்துக்கு வர வேண்டும் என்றும், ஏறும் முன்பும், பயணம் முடிந்த பிறகும், பயணியருக்கு கொரோனா சோதனை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, ரயில் சேவையில் மாற்றம் செய்வது குறித்து, ரயில்வே அதிகாரிகள், நேற்று காலையில் ஆலோசனை நடத்தினர். ‘பிரச்னை குறித்து, மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டன. இருந்தாலும் திட்ட மிட்டபடி, 200 ரயில்களும் இயங்கும்’ என, ரயில்வே அறிவித்தது.
ஆந்திரா அரசு, ’22 ரயில்கள் மட்டுமே மாநிலத்துக்கு இயக்கப்பட வேண்டும். மேலும், கடைசி ரயில் நிலையத்துக்கு முன்பாக, ஒரு ரயில் நிலையத்தில் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும்’ என, கோரியிருந்தது. ஜார்க்கண்ட் மாநிலம், ‘மாநிலத்துக்கு இயக்கப்படும், நான்கு ரயில்களை ரத்து செய்ய வேண்டும். மீதமுள்ள, 20 ரயில்களும், குறைந்த ரயில் நிலையங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும்’ என,கோரியிருந்தது.மஹாராஷ்டிரா அரசும், மாநிலத்துக்குள் உள்ள ரயில் நிலையங்களுக்கு இடையேயான சேவையை நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தது.
சிறப்பு ரயில்களில் நேற்று, 1.45 லட்சம் பேர், பயணம் செய்தனர்.தமிழகத்தில், கோவை — மயிலாடுதுறைக்கு, வாரத்தில் ஆறு நாட்கள் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்; விழுப்புரம் – – மதுரை, திருச்சி — நாகர்கோவில் மற்றும் கோவை — காட்பாடிக்கு தினமும், இன்டர்சிட்டி சூப்பர் பாஸ்ட் ரயில்கள் உட்பட, நேற்று முதல், 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த சிறப்பு ரயில் இயக்கத்தில், மே, 12ல் இருந்து இயக்கப்படும் ராஜ்தானி சூப்பர் பாஸ்ட் ரயிலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களில், நேற்று மட்டும், 1.45 லட்சம் பேர் பயணம் செய்தனர். வரும், 30ம் தேதி வரை, 26 லட்சம் பயணியர் முன்பதிவு செய்துள்ளனர்.