நாட்டு வெடிகுண்டு வீசி கார் டிரைவர் கொலை-மேடவாக்கத்தில் பயங்கரம்

சென்னையை அடுத்த ராஜகீழ்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஷியாம்(வயது 35). கார் டிரைவர். நேற்று முன்தினம் ஷியாம் வீட்டின் அருகே மேடவாக்கத்தைச் சேர்ந்த அஜீத்(25), அவரது நண்பரான சேலையூரைச் சேர்ந்த சிவா(25) ஆகியோர் ஹெல்மட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தனர்.

சந்தேகப்படும்படியாக சுற்றியதால் அவர்கள் 2 பேரையும் தடுத்து நிறுத்திய ஷியாம், “நீங்கள் யார்?, எதற்காக இங்கு சுற்றித்திரிகிறீர்கள்?” என விசாரித்தார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் அஜீத், சிவா இருவரையும் ஷியாம் அடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அஜீத், சிவா இருவரும் தங்களை அடித்த ஷியாமை பழிவாங்க திட்டமிட்டனர். இதற்காக நண்பர்கள் மூலமாக ஷியாமின் செல்போன் எண்ணை அறிந்து கொண்டனர். பின்னர் ஷியாமை செல்போனில் தொடர்புகொண்டு, “ நீ தைரியமான ஆளாக இருந்தால் மேடவாக்கம் பஸ் நிலையம் அருகே உள்ள மைதானத்துக்கு வர முடியுமா?” என கேட்டனர்.

இதையடுத்து ஷியாம், தனது நண்பர் வினோத் என்பவருடன் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்றார். வினோத்தை, சாலையோரம் மோட்டார்சைக்கிள் அருகே நிறுத்திவிட்டு ஷியாம் மட்டும் தனியாக மைதானத்துக்குள் சென்றார். அப்போது அங்கிருந்த அஜீத், சிவா மற்றும் அவரது நண்பர்கள் ஷியாம் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் குண்டு வெடித்ததில் ஷியாமின் கழுத்து, மார்பு போன்ற பகுதிகள் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அஜீத், சிவா உள்பட 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையான ஷியாம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி அவரது நண்பரான வினோத்திடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், நாட்டு வெடிகுண்டுகளை வீசியதால் நான் பயந்து ஓடி வந்துவிட்டேன். பின்னர் சென்று பார்த்தபோது ஷியாம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார் என கூறினார்.

எனவே ஷியாம் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டாரா? அல்லது பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஒடிய 5 பேரையும் தேடி வருகின்றனர்.

இதற்காக 3 போலீஸ் உதவி கமிஷனர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்விரோத தகராறில் நாட்டு வெடிகுண்டு வீசி கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Spread the love

Leave a Reply