திருப்பத்தூர் எஸ்.பி.,க்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பாராட்டு

திருப்பத்துார்,:திருப்பத்துார், எஸ்.பி., விஜயகுமாரின் புதிய முயற்சிக்கு, பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பாராட்டு தெரிவித்து உள்ளார்.
திருப்பத்துார் மாவட்ட காவல் நிலையங்களில், பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா, காவல் துறை பணியின் தரம் எப்படியிருக்கிறது என, தெரிந்து கொள்வதற்காக, புகார்தாரர்களிடமே, ‘பீட்பேக் செல்’
மூலம் பின்னுாட்டம் கேட்கப்படுகிறது.
புகார் அளித்த, 72 மணி நேரத்தில், அவர்களை தொடர்பு கொண்டு, கருத்துகள் பதிவு செய்யப்படுகின்றன. அதற்கேற்ப, விசாரணை அதிகாரிக்கு பாராட்டுகளோ, அறிவுறுத்தலோ வழங்கப்படுகிறது.
இதன்மூலம், காவல் துறையின் பொறுப்பும், அக்கறையும் அதிகரிக்க வழிவகைச் செய்துள்ளார், எஸ்.பி., விஜயகுமார்.
இது தொடர்பான, சிறப்பு காணொலியை, இந்திய ஐ.பி.எஸ்., சங்கம், தன் அதிகாரபூர்வ, ‘டுவிட்டர்’ பக்கத்தில் பகிர்ந்திருந்தது.
இதை, ‘ரீ-டுவிட்’ செய்துள்ள, இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேனுமான, சுரேஷ் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதில், ‘திருப்பத்துார், எஸ்.பி.,யின் அற்புதமான முன்னெடுப்புக்கு வாழ்த்துகள். காவல் துறை வேலையை இன்னும் செறிவூட்டவும், பொதுமக்களின் புகார்களுக்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், எஸ்.பி., எடுத்துள்ள முயற்சி உதவும்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சுரேஷ் ரெய்னாவின் பதிவுக்கு, ‘ரீடுவிட்’ செய்துள்ள, எஸ்.பி., விஜயகுமார், ‘உங்களின் பாராட்டு, மேலும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
இது, சமூக வலைதளங்களில் பரவி, எஸ்.பி., விஜயகுமாருக்கு பாராட்டுகள் குவிகின்றன

Spread the love

Leave a Reply