கொரோனா…வெட்டுக்கிளி….நிசர்கா புயல்: 129 ஆண்டுகளுக்கு பின் சோதனை

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பும் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகரித்து வருகிறது.

இந்த இரண்டு விஷயங்களில் இருந்து எப்படி மீள்வது என தெரியாமல் விழி பிதுங்கி கொண்டிருக்கும் மகாராஷ்டிர மாநில அரசுக்கு தற்போது புதிய சோதனையாக நிசர்கா புயல் உருவெடுத்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும், 24 மணி நேரத்தில் புயலாக உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால், நிசர்கா என்று அழைக்கப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கியும், அதன்பிறகு வடக்கிலிருந்து கிழக்காகவும் நகர்ந்து மகாராஷ்டிராவுக்கு நாளை செல்ல உள்ளது. தொடர்ந்து, ஜூன் 3ஆம் தேதி (நாளை மறுநாள்) வடக்கு பகுதியில் இருந்து குஜராத்தின் தெற்கு பகுதியை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, ஜூன் 3ஆம் தேதி நிசர்கா புயல் வடக்கு மகாராஷ்டிரா, குஜராத் கடற்கரை இடையே ராய்காட் மாவட்டம் ஹரிஹரேஷ்வர் மற்றும் டாமன் ஆகிய பகுதிகள் இடையே கரையை கடக்கும் என தெரிகிறது.

இதனால் மகாராஷ்டிரா, குஜராத் மாநில கடற்கரை பகுதிகளில் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக மும்பை கரையை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. நாளை முதல் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மும்பையில் புயல் தாக்கும் அபாயம் இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1891ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது சுமார் 129 ஆண்டுகளுக்குப் பின்னர், மகாராஷ்டிராவை நெருங்கி வரும் முதல் ஜூன் மாத வெப்ப மண்டல புயல் இது என்று வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Leave a Reply