இந்திய பொருளாதாரம் மீட்டெடுப்பதில்’ சிரமமில்லை-பிரதமர் மோடி

புதுடில்லி :”கொரோனா மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நம் பொருளாதாரம், மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திரும்புவதில், சிரமம் ஏதுமில்லை. ஊரடங்கு காலத்தில் செய்யப்பட்டுள்ள, தற்சார்பு போன்ற சீர்திருத்தங்கள், நம் பொருளாதாரம் மீட்சி அடைவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்,” என, பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்று, பிரதமர் மோடி பேசியதாவது:தற்போது நாம், கொரோனா வைரசை கட்டுப்படுத்தி, மக்களின் உயிர்களை பாதுகாக்கும் பணியை திறமையாக செய்து வருகிறோம். மற்றொரு பக்கம், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரி செய்ய, நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நடவடிக்கை

ஊரடங்கு,சில பகுதிகளில் தொடர்ந்தாலும், மற்ற பகுதிகளில், அதை தளர்த்தும் முதல் கட்ட நடவடிக்கைகளை துவக்கியுள்ளோம். பொருளாதார பாதிப்பை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே துவங்கி விட்டோம். இந்திய தொழில் துறை, வளர்ச்சிக்கான முயற்சியில் இறங்கிஉள்ளது.ஊரடங்கு காலம் முடிந்ததும், இந்திய பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கண்டிப்பாக செல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

நம் நாட்டின் விவசாயிகள், சிறு, குறு தொழில் துறையினர்,தொழில் அதிபர்கள் ஆகியோர், பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு மீண்டும் அழைத்துச் செல்வர். அவர்கள் மீது நம்பிக்கை உள்ளது. பொருளாதார வளர்ச்சி, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.ஊரடங்கு காலத்தில், நாம் செய்துள்ள சில சீர்திருத்தங்கள், பொருளாதாரத்தை வளர்ச்சிக்கு அழைத்துச் செல்வதற்கு உதவியாக இருக்கும். இதைப் பின்பற்றி, தொழில் துறையில் மேலும் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். நாம், தற்சார்பு பொருளாதாரத்தை முன்னிலைப் படுத்தியுள்ளோம். அனைத்து பொருட்களையும் நம் நாட்டிலேயே தயாரிப்பதற்கான முயற்சியை துவக்கி உள்ளோம்.

பொருளாதார வளர்ச்சியில், இது, முக்கிய பங்கு வகிக்கும். பொருளாதாரத்தை மீட்கும் பணி, கடினமாக இருக்காது. தற்சார்பு பொருளாதாரம் நமக்கு கைகொடுக்கும். மற்ற நாடுகள் முன்னிலையில், நாம் சக்தி வாய்ந்த நாடாக திகழ்வோம்.நமக்காகவும், சர்வதேச நாடுகளுக்காகவும், பொருட்களை தயாரிப்போம். தற்சார்பு இந்தியா என்பது, இறக்குமதியை குறைத்து, தயாரிப்பை அதிகரிப்பதே. தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு, நோக்கம், அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய வளர்ச்சி, முதலீடு, கட்டமைப்பு, புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவை மிகவும் அவசியம். இந்திய தொழில் துறையை சக்தி வாய்ந்ததாக மாற்ற வேண்டும். இதன் மூலம், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதனால், பொருளாதாரம் மேம்படும்.

அனுமதி

அணுசக்தி, விண்வெளி போன்ற துறைகளில், தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள், வயதானோர் மற்றும் ஏழை பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக, 53 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நாடு முழுதும், எட்டு கோடி வீடுகளுக்கு இலவச சமையல், ‘காஸ்’ வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை விருப்பத்துக்கு ஏற்ப விற்பனை செய்யும் விதமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம், பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.இவ்வாறு, அவர்பேசினார்.

Spread the love

Leave a Reply