விஜய்க்கு கதை சொன்னது உண்மை தான், ஆனால்.. காமராஜ் கூறிய பதில்

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர், பாடகர் என தனது பல வித திறமைகளால் ரசிகர்களை கவர்ந்தவர் அருண்ராஜா காமராஜா. சமீபத்தில் அவர் எழுதி, இயக்கிய கன்னக்குழி அழகே என்கிற பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் யேசுதாஸ் அந்த பாடலை பாடி இருந்தார்.

அருண்ராஜா தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி பாடலுக்கு வரிகள் எழுதி இருந்தார். அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட ஹிட் ஆனது, ஆங்கில வரிகள் உள்ள பாடல் என்பதால் வெளிநாட்டிலும் ரசிகர்கள் அதை கொண்டாடிய பல வீடியோக்களை பார்க்க முடிந்தது.

இந்நிலையில் சில மாதங்கள் முன்பு விஜய்யிடம் அருண்ராஜா காமராஜ் கதை கூறினார் என செய்திகள் வந்தது. அது பற்றி தற்போது ஒரு பேட்டியில் பேசி உள்ளார் அவர்.

விஜய்க்கு கதை கூறியது உண்மைதான் என கூறியுள்ள அவர், ஆனால் தற்போது அந்த படத்தை எடுப்பதற்கு வாய்ப்பு அமையவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யை இயக்க வேண்டும் என்கிற கனவு அடுத்த முறை அவரை சந்தித்து கதை கூறும்போது நிச்சயம் நிறைவேறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் அவர். எப்போது ஷூட்டிங் போகலாம் என அவரே கேட்கும்படி அமையும் என காத்திருக்கிறாராம் அவர்.

மேலும் விஜய்யை சந்தித்து கதை கூறியதே மகிழ்ச்சியான விஷயம் தான் என தெரிவித்துள்ள அவர், பலர் அவரிடம் கதை சொல்லும் வாய்ப்பு கூட கிடைக்காமல் காத்திருப்பது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
விஜய் அடுத்து நடிக்கவுள்ள தளபதி65 படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. அந்த படத்தினை ஏ.ஆர்.முருகாதாஸ் தான் இயக்குகிறார் என கூறப்படுகிறது. ஆனால் அது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. கொரோனா முழு அடைப்பு காரணமாக சினிமா ஷூட்டிங் நடத்த தடை உள்ள நிலையில் அரசு அனுமதி அளித்த பிறகு தான் தளபதி 65 படத்தின் பூஜை மற்றும் ஷூட்டிங் துவங்கும் என தெரிகிறது.

விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் படமும் ரிலீசுக்கு காத்திருக்கிறது. ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய இந்த படம் கொரோனாவால் தள்ளி போனது. மாஸ்டர் படம் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகலாம் என்ற பேச்சு தமிழ் சினிமா வட்டாரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அருண்ராஜா காமராஜா சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படம் மூலமாக சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர். அடுத்து அவர் Article 15 என்ற பாலிவுட் படத்தின் ரீமேக்கை இயக்கவிருப்பதாக சமீபத்தில் செய்தி வந்தது. ஹிந்தியில் ஆயுஷ்மன் குரானா நடித்த அந்த படம் பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. அதன் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார் என்றும், அஜித்தின் வலிமை படத்தை தயாரிக்கும் போனி கபூர் தான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் ரசிகர்களுக்கு தகுந்தாற் போல கதையை மாற்றும் பணியில் அருண்ராஜா தற்போது இருக்கிறார் வேண்டும், அதிகாரபூர்வ அறிவிப்பு லாக்டவுன் முடிந்து இயல்புநிலை திரும்பிய பிறகு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love

Leave a Reply