நடிகர் சிம்பு திருமணம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்-டி.ராஜேந்தர்

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், சிம்பு. அவருக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய அப்பா டி.ராஜேந்தரும், அம்மா உஷா ராஜேந்தரும் மணப்பெண்ணை தேடி வருகிறார்கள்.

இந்தநிலையில் அவருடைய தம்பி குறளரசனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இதனைத்தொடர்ந்து சிம்புவின் திருமணம் தொடர்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு மே மாதம் உறவுப்பெண் ஒருவருடன் சிம்புவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. அது காட்டுத்தீ போல் வேகமாக பரவியது.

இதற்கு மறுப்பு தெரிவித்த சிம்பு, திரையுலகில் பிரபலமாக உள்ள கலைஞர்கள் தினமும் பலரை சந்திப்பது தவிர்க்க முடியாதது. அதை வைத்து அவர்களின் சொந்த வாழ்க்கையை இணைத்து பேசக்கூடாது.

கற்பனையான தகவல்களை செய்திகளாக வெளியிட கூடாது. என் திருமணத்தை பற்றி வெளியான தகவல்களில் உண்மையில்லை. அந்த வதந்தியை யாரும் நம்பவேண்டாம். என் திருமணத்தை முன்கூட்டியே நானே அறிவிப்பேன். ரசிகர்களும், பொதுமக்களும் கற்பனையாக வெளியாகும் செய்திகளை நம்பவேண்டாம். எந்த பெண்ணுடனும் இதுவரை எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என கூறியிருந்தார்.

இந்தநிலையில் சிம்புவின் திருமணம் குறித்து பல தகவல்கள் வெளியான நிலையில் நடிகர் சிம்பு திருமணம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் திருமணம் பற்றிய நற்செய்தியை சந்தோஷத்துடன் அறிவிப்போம்.

நடிகர் சிம்பு லண்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் வீட்டுப் பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும், கொரோனா பிரச்சினைகள் முடிவடைந்த பின்னர் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் இதில் உண்மையில்லை. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மைத்தன்மை அற்றவை. சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Leave a Reply