பராமரிப்பின்றி பாழாகும் பல அரசுப்பள்ளிகள்!!!!

தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கும்? புது சீருடை அணிவது எப்போது? என்ற ஏக்கத்தில் மாணவ-மாணவிகள் உள்ள நிலையில்  கடந்த  70 நாட்களாக பூட்டிக் கிடக்கும் பல அரசுப் பள்ளி வளாகங்கள் பராமரிப்பின்றி பாழாகிறது. கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவியதை அடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அன்றைய தினம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பல்வேறு தளர்வுகளுடன் 5வது முறையாக ஊரடங்கு நீடிக்கப்பட்ட நிலையிலும் தடைப் பட்டியலில் பள்ளிகள் முக்கிய இடத்தில் உள்ளன.

மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை எப்போது திறப்பது என அரசு இன்னும் முடிவு செய்யவில்லை.அதே நேரத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை வருகிற 15ம் தேதியில் இருந்து நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆயத்த பணிகள் பள்ளிகளில் நடக்கின்றன. 10-ம் வகுப்பு தேர்வு நடைபெறும் பள்ளிகள் மட்டும் தற்போது தேர்வுக்காக சுத்தப்படுத்தப்பட்டு தயார் படுத்தப்பட்டு வருகின்றன.

தேர்வு நடைபெறாத பள்ளிகள் மூடப்பட்டு பராமரிப்பின்றி காட்சியளிக்கின்றன.வழக்கமாக புதிய கல்வி ஆண்டு ஜூன் 1ம் தேதி தொடங்கும். அதன்படி நேற்று புதிய கல்வி ஆண்டிற்காக பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய நாள் ஆகும். மாணவ-மாணவிகள் புத்தாடை அணிந்து புதிய புத்தக கட்டுகளுடன் பட்டாம்பூச்சிகள் போல் மகிழ்ச்சியாக தங்கள் புதிய வகுப்பறை நோக்கி செல்ல வேண்டிய நிலையில் 70 நாட்களாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். பெரும்பாலான மாணவ மாணவிகள் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று ஏக்கத்துடன் உள்ளனர்.இதனிடையே கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் அதிவேகமாக அதிகரித்து வருவதால் இந்த மாதம் முழுவதும் பள்ளி திறப்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே தொடர்ந்து 100 நாட்களுக்கு மேல் மாணவ மாணவிகள் வீடுகளில் முடங்கி கிடக்கும் சூழ்நிலை முதல் முறையாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

Spread the love

Leave a Reply